×

கன்னிப்பூ சாகுபடி பணிக்கு கோடை மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்

*சுட்டெரிக்கும் வெயிலால் அச்சம்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக நாற்றங்கால் தயாரிக்க கோடை மழையை விவசாயிகள் எதிர்நோக்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தால் அச்சம் அடைந்துள்ளனர்.குமரி மாவட்டத்தில் இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. கும்பபூ அறுவடை பணி முடிந்து கன்னிப்பூ சாகுபடிக்கு விவசாயிகள் தயராகி வருகின்றனர். வருடம் தோறும் ஜூன் 1ம் தேதி பேச்சிப்பாறை அணை பாசனத்திற்கு திறக்கப்படுவது வழக்கம். ஜூன் மாதத்தை மையப்படுத்தி, விவசாயிகள் தங்களது வயல்களில் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளை செய்வார்கள். மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. இதனால் கன்னிப்பூ சாகுபடி பணி தொடங்குவதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

கன்னிப்பூவின் போது அம்பை 16, திருப்பதிசாரம் 5 மற்றும் பாரம்பரிய நெல் ரகமான கட்டிச்சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்வது வழக்கம். வேளாண்துறை சார்பில் வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் விதைகள் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தவிர உரக்கடைகளில் விதை நெல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான விதை நெல் விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது. பறக்கை, சுசீந்திரம், புத்தளம் பகுதியில் பறக்கை, பால்குளத்தை நம்பி தொழி நாற்றங்கால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தயாரித்துள்ளனர்.

மற்ற பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பொடிநாற்றங்கால் தயாரிப்பதற்காக வயல்களை உழுது போட்டுள்ளனர். இதனால் வயல்களில் பயிர்களுக்கு தீமை தரும் பூச்சிகள் அளிந்துவிடும் என விவசாயிகள் கருதுகின்றனர். ஆனால் முதலில் அறுவடை செய்யப்பட்ட தேரூர் பகுதிகளில் பொடி விதைப்புக்கு ஆயத்தம் ஆகி வருகின்றனர். அவர்கள் வயல்களை உழுதுபோட்டுள்ளனர். மழையை எதிர்நோக்கியுள்ள தேரூர் விவசாயிகள் மழை வந்தவுடன், நெல் விதைகளை பொடிவிதைப்பு மூலம் சாகுபடி செய்ய தீர்மானித்துள்ளனர்.
ஆனால் பறக்கை, சுசீந்திரம், புத்தளம் விவசாயிகள் தற்போது நாற்றங்கால் அமைத்துள்ளதால், மே மாதம் இடையில் நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை எடுத்து, வயல்களில் சாகுபடி செய்ய முடிவு செய்துள்ளனர். இது குறித்து பறக்கை விவசாயி ரவீந்திரன் கூறியதாவது:

பறக்கை, சுசீந்திரம், புத்தளம் பகுதியில் உள்ள வயல்பரப்புகள், பறக்கை குளம், பால்குளத்தை நம்பியுள்ளது. போதிய அளவு தண்ணீர் இருந்ததை தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு பறக்கை வயல்பரப்புகளில் தொழிநாற்றங்கால் தயாரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வயல்களை உழுது, வயல்களுக்கு தேவையான உரங்களையும் போட்டுள்ளோம். மே மாதம் நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை பிரித்து வயல்களில் சாகுபடி பணியை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

முன்னோடி விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் குளத்து பாசன வசதி பெறும் பகுதிகளில் தொழிவிதைப்பு மூலம் நாற்றங்கால் தயாரித்துள்ளனர். ஆற்றுபாசனத்தை நம்பியுள்ள வயல்பரப்புகளில் பொடி விதைப்புக்கு தங்களது வயல்களை உழுது தயார்படுத்தி வைத்துள்ளனர். ஒரு சில இடங்களில் பொடிவிதைப்பு மூலம் நாற்றங்கால் தயாரித்துள்ளனர். ஆனால் தேரூரில் பொடிவிதைப்பு செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோடை மழையை எதிர்நோக்கியுள்ளனர்.

பொடிவிதைப்பு செய்யும் போது தண்ணீர் இல்லாமல் இருந்தால் கூட நாற்றுகள் அப்படி இருக்கும். பின்னர் தண்ணீர் வந்தவுடன் நாற்றங்காலை பிரித்து நடவு செய்தபிறகு, நெல் பயிர்களின் நாட்கள் தொடங்கும். ஆனால் தொழிவிதைப்பு மூலம் நாற்றங்கால் தயாரிக்கும் போது நாற்றங்கால் விதைப்பு செய்த நாளில் இருந்தே நெல் பயிர்களின் நாட்கள் தொடங்கி விடும்.

பேச்சிப்பாறை அணையில் தற்போது 42 அடி தண்ணீர் உள்ளது. போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால், அணை ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்தால், விவசாயிகள் அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்வார்கள். அணை திறப்பு தொடர்பாக கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கமுடிவு செய்துள்ளோம் என்றார்.

காலம் கடக்காமல் அணையை திறக்க வேண்டும்

விவசாயி செண்பகசேகரபிள்ளை மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் ஜூன் 1ம் தேதி சாகுபடிக்கு அணைகள் திறந்தால், கன்னிப்பூ, கும்பபூ முடிந்து பிப்ரவரி மாதம் அணை மூடப்படும். ஜூன் முதல் வாரம் அணை திறக்காமல் காலம் கடந்து அணைகள் திறக்கும் போது கன்னிப்பூ அறுவடை முடிந்து கும்பபூ பயிர்களை காப்பாற்ற பிப்ரவரி மாதத்திற்கு பிறகு அணை தண்ணீர் வழங்க தொடர்ந்து கோரிக்கை விட வேண்டியுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் ஜூன் மாதத்தில் அணையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குள் விவசாயிகளுக்கு அணை திறப்பு குறித்த செய்தியை வெளியிட வேண்டும் என்றார்.

தண்ணீர் வற்றும் பறக்கை குளம்

விவசாயி ரவீந்திரன் கூறுகையில், தற்போது கொடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பறக்கைகுளத்தில் தண்ணீர் வற்றி வருகிறது. இதனால் சாகுபடி தொடங்குவதற்கு முன்பு கோடை மழை பெய்தால், தண்ணீர் பிரச்சனை ஏற்படாது. மழை பெய்யவில்லை என்றால் அணை திறப்பை எதிர்நோக்கி இருக்க வேண்டியுள்ளது என்றார்.

The post கன்னிப்பூ சாகுபடி பணிக்கு கோடை மழையை எதிர்நோக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari ,
× RELATED கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட குமரியில் 18 இடங்களில் தானியங்கி மழைமானி